காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி அதிகரித்து உள்ளது.
காற்றாலை மின் உற்பத்தி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, காமாட்சிபுரம், கண்டமனூர், சீப்பாலக்கோட்டை, கோவிந்தநகரம், மரிக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது. ஒரு காற்றாலையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 36 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தேனி மாவட்டத்தில் கடந்த மே மாதம் இறுதியில் இருந்து தென்மேற்கு பருவ காற்று வீசத் தொடங்கியது. அதில் காற்றின் வேகம் சராசரியாக வினாடிக்கு 10 மீட்டர் என்ற அளவில் இருந்து வந்தது. இதன் காரணமாக காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் வீசும் காற்றின் வேகம் திடீரென அதிகரித்தது. குறிப்பாக ஆண்டிப்பட்டி மற்றும் காமாட்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனையடுத்து காற்றாலையின் மின்சார உற்பத்தி தற்போது கிடுகிடுவென அதிகரித்து உள்ளது.
30 ஆயிரம் யூனிட்
நேற்றைய நிலவரப்படி ஒரு காற்றாலையின் ஒரு நாள் சராசரி மின்சார உற்பத்தி 30 ஆயிரம் யூனிட்டாக அதிகரித்தது. காற்றின் வேகமும் வினாடிக்கு 14 மீட்டராக அதிகரித்து உள்ளது.
தேனி மாவட்டத்தில் வீசும் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் காற்றாலை மின்சார உற்பத்தி விரைவில் உச்சகட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் காற்றாலை பணியாளர்கள் தெரிவித்தனர்.