காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகன போக்குவரத்தும் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.

Update: 2023-08-01 21:00 GMT

கூடலூர்

கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகன போக்குவரத்தும் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து முதுமலை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையை கடப்பது வழக்கம். மேலும் முக்கிய சாலை என்பதால் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படுகிறது.

இதனால் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கும். மேலும் இரவு 9 மணிக்கு மேல் முதுமலை புலிகள் காப்பக சாலையில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. இதனால் ஊட்டி மற்றும் கேரளா உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் விரைவாக செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

வனவிலங்குகள் நடமாட்டம்

அப்போது கூடலூர் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து விடுகிறது. இதன் காரணமாக காலதாமதமாக செல்லும் வாகன ஓட்டிகள் புலிகள் காப்பக நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூரில் இருந்து கர்நாடகா நோக்கி வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது மாநில எல்லையில் ஒரு புலி சாலையை கடக்க முடியாத வகையில் நின்று கொண்டிருந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை தொலைவில் நிறுத்தினர். இருப்பினும், பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் இருந்ததால் புலியால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. பின்னர் வந்த வழியாக சென்றது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதேபோல் நேற்று முன்தினம் இரவு தொரப்பள்ளியில் இருந்து கார்குடி இடையே குட்டிகளுடன் காட்டு யானைகள் சாலையில் வந்து நின்றது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. 

Tags:    

மேலும் செய்திகள்