சாமந்தி, ரோஜா விலை அதிகரிப்பு

நேதாஜி பூ மார்க்கெட்டில் சாமந்தி, ரோஜா பூ விலை அதிகரித்துள்ளது.

Update: 2023-10-13 16:49 GMT

பூ மார்க்கெட்

வேலூர் நேதாஜி பூ மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பூக்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

விசேஷ நாட்களில் ஏராளமான பொதுமக்கள் பூக்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்வார்கள். இதனால் பூக்களுக்கு மவுசு அதிகரிக்கும்.

இந்தநிலையில் நவராத்திரி, மகாளய அமாவாசையையொட்டி வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பூக்கள் வாங்க மக்கள் அதிகளவில் வந்திருந்தனர். இதனால் மார்க்கெட் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. சில பூக்கள் விலையும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க செயலாளர் கே.எம்.ஜி.முத்துகணேசன் கூறியதாவது:-

சாமந்தி விலை அதிகரிப்பு

சில வாரங்களாக பூக்கள் விலை மந்தமாகவே இருந்தது. நேற்று முன்தினம் சாமந்தி ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையான ரோஜா நேற்று ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மல்லி, முல்லை, கனகாம்பரம் ஆகிய பூக்கள் விலையில் மாற்றம் இல்லை. இவை ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையானது. கேந்தி பூ வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. எனவே அதன் விலை மிகக்குறைவாகவே இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்