கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் அதிகரிப்பு

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் இனப்பெருக்கம் அதிகமாகி வருவதால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Update: 2023-10-13 18:45 GMT

பனைக்குளம், 

ஜெல்லி மீன்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. தமிழகத்திலேயே அதிகமான மீன்பிடி படகுகளை கொண்ட மாவட்டம் ராமநாதபுரம்தான். மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு, பைபர் படகுகளும் சிறிய வத்தைகளும் உள்ளன. படகுகளில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலையில் சீலா, மாவுலா, பாறை, முரல், கிளி, விளை, திருக்கை, நண்டு, இறால், கணவாய் உள்ளிட்ட பல வகையான மீன்கள் கிடைக்கும். இதை தவிர கடலுக்குள் ஜெல்லி மீன்களும் உள்ளன.

இந்தநிலையில் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஜெல்லி மீன்களின் இனம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஜெல்லி மீன்களின் இனப்பெருக்கம் கடலுக்குள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மீனவர்களும் கவனமாக மீன்பிடிக்க சென்று வர வேண்டும் என மீன் துறை அதிகாரிகளால் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

உயிரிழப்பை ஏற்படுத்தும்

இதுகுறித்து கடல் சார்ந்த விஞ்ஞானி ஒருவர் கூறும்போது, ஜெல்லி மீனை மீனவர்கள் சொறி மீன் என்றும் அழைப்பதுண்டு. அவை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், மிகவும் ஆபத்தானது. ஜெல்லி மீன்கள் உடலில் உள்ள தூரிகை போன்ற பகுதி நமது உடலின் ஏதாவது ஒரு இடத்தில் பட்டால் அந்த இடத்தில் வலி ஏற்பட்டு அரிப்பு ஏற்பட தொடங்கும். அது பெரிய புண்ணாகவும் மாற வாய்ப்புள்ளது.

மேலும் ஜெல்லி மீன்கள் மனிதர்களை கடித்தால் மூச்சடைப்பை ஏற்படுத்தி இதயத்தை செயலிழக்க செய்து உயிருக்கு ஆபத்து ஏற்படும். தற்போது மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ஜெல்லி மீன்களின் இனப்பெருக்கம் அதிகரித்து வருகின்றது.

வலைகளில் ஜெல்லி மீன்கள் சிக்கினால் அதை கவனமுடன் கையாள வேண்டும் என்றார்.

கட்டுப்படுத்த வேண்டும்

பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிகரித்து வரும் ஜெல்லி மீன்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது. அழகும், ஆபத்தும் நிறைந்த இந்த ஜெல்லி மீன்களை கண்டால் பெரிய திமிங்கலங்கள், சுறா மீன்கள் கூட பயந்து ஒதுங்கி சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்