தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகம் களைக்கட்டியது வரத்து அதிகரிப்பால் மீன்கள் விலை வீழ்ச்சி

மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை நேற்று என்தால் கடலூர் துறைமுக மீன்பிடி தளம் களைக்கட்டி காணப்பட்டது. மேலம் வரத்து அதிகரிப்பு காரணமாக, மீன்களின் விலையும் வீழ்ச்சியுடன் இருந்தது.

Update: 2022-06-19 16:51 GMT


கடலூர் முதுநகர், 


தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல்-15 முதல் ஜூன் 14-ந் தேதி வரையிலும் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக, இந்த 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் கடலூர் துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் 61 நாட்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். கடந்த 14-ந்தேதியுடன் தடைகாலம் நிறைவு பெற்றதால், 15-ந்தேதி அதிகாலை முதல் ஆழ்கடலுக்கு மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.

களைக்கட்டியது

இவர்கள் வழக்கமாக 4 முதல் 5 நாட்கள் வரைக்கும் கடலில் தங்கி மீன்பிடித்து வருவதுண்டு. அந்த வகையில் நேற்று பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பினார்கள்.

அதோடு, தடைகாலம் முடிந்து வந்த முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், மீன்கள் வாங்குவதற்கும் துறைமுகத்தில் ஏராளமானவர்கள் குவிந்தனர். இதனால் கடந்த 61 நாட்களாக வெறிச்சோடி கிடந்த துறைமுக பகுதி நேற்று மக்கள் கூட்டத்தால் களைக்கட்டி காணப்பட்டது.

விலை வீழ்ச்சி

கரைதிரும்பிய மீனவர்களின் வலைகளில் பெரும்பாலான வகை மீன்கள் அதிக அளவில் சிக்கின. குறிப்பாக சங்கரா, கானாங்கத்தை, கனவாய், கிளிசல், இறால், போன்ற மீன் வகைகள் அதிக அளவில் கிடைத்தது. அசைவ பிரியர்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். மேலும் வியாபாரிகளும் மீன்களை அதிகளவில் வாங்கி சென்றனர். துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தும், மீன்களின் வரத்து அதிகப்படியானதாக இருந்ததால், அதன் விலை சற்று வீழ்ச்சியுடன் காணப்பட்டது.

அந்த வகையில் வழக்கமாக கிலோ 300 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் சங்கரா மீன் நேற்று ரூ. 180-க்கும், கிலோ ரூ. 160-க்கு மேல் விற்பனையாகும் கானாங்கத்தை மீன் ரூ.100-க்கும், ரூ.100-க்கு மேல் விற்பனையாகும் கிளிச்சை மீன் ரூ.50-க்கும், ரூ. 300-க்கு மேல் விற்பனை செய்யப்படும் கனவாய் மீன் ரூ. 250 என்கிற நிலையில் விற்பனையானது. தடைகாலம் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமையில் இதுபோன்று விலை வீழ்ச்சி கண்டு இருந்தது மீனவர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இந்த விலையானது இன்று அதிகளவில் மாற்றத்துக்கு இருக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

40 டன் மீன்கள் வரத்து

இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், எங்களது மீன்பிடி படகில் அதிக அளவு கனவாய் மீன்கள் சிக்கின. இதன்மூலம் கடலூர் துறைமுகத்திற்கு 20 டன் அளவிற்கு கனவாய் மீன்கள் வரத்து இருந்தது. இதுதவிர சங்கரா, கானாங்கத்தை, கிளிசல் போன்ற மீன் வகைகளும் 20 டன் அளவிற்கு வரத்து இருந்தது. மீன்பிடி தடைகாலம் முடிந்தபின் வந்த முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்பியதாலும், மீன்களை வாங்குவதற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெருமளவில் ஆர்வமுடன் துறைமுகப் பகுதிக்கு வந்திருந்தனர். ஒரே நேரத்தில் அதிகப்படியான படகுகள் கரை திரும்பியதால், மீன்களின் வரத்தும் அதிகமாக இருந்தது. இதனால் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் விலை போகவில்லை. இனி வரும் நாட்களில் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்