கோத்தகிரியில் சாகுபடி பரப்பு அதிகரிப்பு: உருளைக்கிழங்கு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச 'ஸ்பிரிங்ளர்' அமைக்கும் பணி மும்முரம்

கோத்தகிரியில் உருளைக்கிழங்கு சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளது. அதற்கு தண்ணீர் பாய்ச்ச ‘ஸ்பிரிங்ளர்’ அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-07-05 12:19 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் உருளைக்கிழங்கு சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளது. அதற்கு தண்ணீர் பாய்ச்ச 'ஸ்பிரிங்ளர்' அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

உருளைக்கிழங்கு சாகுபடி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த புரூக்கோலி, ஐஸ்பெர்க், சல்லாரை, சுகினி உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கடந்த சில வாரங்களாக நீலகிரி உருளைக்கிழங்குக்கு நல்ல கொள்முதல் விலை கிடைத்து வருகிறது.

பரப்பு அதிகரிப்பு

இதன் காரணமாக கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா, கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, உயிலட்டி, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள், தங்களது நிலத்தில் அறுவடைக்கு தயாரான உருளைக்கிழங்கை அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர். மேலும் பெரும்பாலான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் மீண்டும் உருளைக்கிழங்கு பயிரிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி தண்ணீர் பாய்ச்ச 'ஸ்பிரிங்ளர்' அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.

மூட்டை ரூ.2,100-க்கு கொள்முதல்

இதுகுறித்து பனஹட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக உருளைக்கிழங்கு கிலோவுக்கு ரூ.35 முதல் ரூ.45 வரை கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. கொள்முதல் விலை நிலையாக இருப்பதால் அதை பயிரிட்ட விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்து வருகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரிட ஆர்வம் காண்பித்து வருகின்றனர். உயர்தர விதைகளான கிரிராஜா, குப்பிரி ஜோதி, ஜலந்தர் மற்றும் பண்ணை கிழங்கு விதைகளை பயிரிட்டு வருகிறோம்.

தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டியில் 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உருளைக்கிழங்கு ரூ.2,100 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்