ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.9.40 கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2023-10-12 15:31 GMT

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.10.2023) சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், சீன நாட்டின் ஹாங்சோவில் நடைபெற்ற 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சார்ந்த 20 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 9 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்தினார்.

கடந்த 23.09.2023 முதல் 8.10.2023 வரை சீன நாட்டின் ஹாங்சோவில் நடைபெற்ற 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 20 வீரர், வீராங்கனைகள் 9 தங்கம், 11 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றனர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளின் விவரங்கள்:

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகளப் போட்டியில் 1 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற ராஜேஷ் ரமேஷ், 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற சுபா வெங்கடேசன், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கங்கள் வென்ற வித்யா ராம்ராஜ், டிரிப்பிள் ஜம்ப் போட்டியில் 1 வெண்கலப் பதக்கம் வென்ற பிரவின் சித்ரவேல், துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிரதிவிராஜ் தொண்டைமான்;

ஸ்குவாஷ் போட்டிகளில் 1 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கங்கள் வென்ற சவ்ரவ் கோஷல், 2 தங்கப் பதக்கங்கள் வென்ற ஹரிந்தர் பால் சிங் சந்து, 1 தங்கம் மற்றும் 1 வெண்கலப் பதக்கங்கள் வென்ற அபய் சிங், 1 தங்கம் மற்றும் 1 வெண்கலப் பதக்கங்கள் வென்ற தீபிகா பல்லிகல் கார்த்திக், 1 வெண்கலப் பதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா;

டென்னிஸ் போட்டியில் 1 வெள்ளிப் பதக்கம் வென்ற ராம்குமார் ராமநாதன், ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தலா 1 வெண்கலப் பதக்கம் வென்ற வி. ஆனந்த் குமார், ஆர்த்தி கஸ்தூரிராஜ் மற்றும் ஜெ. கார்த்திகா, சதுரங்கப் போட்டியில் தலா 1 வெண்கலப் பதக்கம் வென்ற டி. குகேஷ், பிரக்ஞானந்தா, ஆர். வைஷாலி மற்றும் பி. சவிதா ஸ்ரீ, கிரிக்கெட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற சாய் கிஷோர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 20 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 9 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்கி வாழ்த்தினார்.

இவ்விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்