விஸ்வநாதபுரத்தில் சாலை அமைக்க வலியுறுத்தி குடியேறும் போராட்டம்
குளித்தலை அருகே விஸ்வநாதபுரத்தில் சாலை அமைக்க வலியுறுத்தி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை வசதி வேண்டும்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்டது விஸ்வநாதபுரம் என்று அழைக்கப்படும் சுப்பன் ஆசாரிக்களம். இந்த பகுதியில் சாலை வசதி அமைத்து கொடுக்க வலியுறுத்தி இந்தப் பகுதி பொதுமக்கள் சார்பில் மருதூர் பேரூராட்சி, குளித்தலை வருவாய்த்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பலமுறை மனுக்கள் கொடுத்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.
இந்தநிலையில் உடனடியாக அந்த பகுதிக்கு சாலை அமைத்துதரவேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விஸ்வநாதபுரம் பொதுமக்கள் சார்பில் குளித்தலை காந்தி சிலை முன்பு குடும்பத்துடன் குடியேறும் போராட்டம் நடத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
போராட்டம்
இந்தப்போராட்டம் நடைபெற உள்ளதாக ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிடப்பட்டும் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தாங்கள் அறிவித்தப்படி குளித்தலை காந்தி சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குளித்தலை ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடுகள் மற்றும் பாத்திரங்கள், காலிக்குடங்களுடன் நேற்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அங்கு வந்த குளித்தலை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 18 ஆண்கள், 16 பெண்கள், சிறுவர்-சிறுமியர் 7 பேர் என மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்திற்கு சென்ற குளித்தலை வட்டாட்சியர் மகுடீஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
41 பேர் மீது வழக்கு
அப்போது விஸ்வநாதபுரத்தில் சாலை அமைப்பது தொடர்பாக ஒரு வார காலத்தில் உயர் அதிகாரியுடன் பேசி நடவடிக்கை எடுக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படவில்லை எனில் அதன் பின்னர் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.