வலங்கைமானில், மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியல்
ஸ்ரீதர் வாண்டையாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து வலங்கைமானில், மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வலங்கைமான்:
ஸ்ரீதர் வாண்டையாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து வலங்கைமானில், மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாக்குதல்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா நெடுவாசல் பகுதி கீழத்தெருவை சேர்ந்த தங்கபாலு மகன் சேரன்(வயது 24). இவர், ஆவூரில் உள்ள ஒருவரின் ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வந்தார்.
கடந்த மாதம் 28-ந் தேதி இரவு சேரன் ஆட்டோவை உரிமையாளர் வீட்டின் முன்பாக நிறுத்திவிட்டு தனது தம்பி தினகரன் மற்றும் நண்பர் சிலம்பரசன் ஆகியோருடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த சிலர், 3 பேரையும் சாதி பெயரை கூறி திட்டி தாக்கினர்.
தீக்குளிக்க முயற்சி
இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என கூறி சேரனின் தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்தார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் வலங்கைமான் போலீசார் சேரன் கொடுத்த புகாரின் பேரில் ஆவூர் சாளுவம்பேட்டை பகுதியை சேர்ந்த விஜயகுமார், கவுதம், பிரேம் சம்பத், செந்தில் மற்றும் கடலூர் மாவட்டம் வீராணம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்குப்பதிவு
இதேபோல் பிரேம்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கூறி பிரேம்குமாரின் குடும்பத்தினரும் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர்.
இதை தொடர்ந்து பிரேம்குமார் கொடுத்த புகாரின் பேரில் சிலம்பரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகள் தொடர்பாக யாரும் கைது செய்யப்படாததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும், மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பிலும் நேற்று வலங்கைமானில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
பேச்சுவார்த்தை
இதனைத்தொடா்ந்து வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபால கிருஷ்ணன் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தாா உறுதி அளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
இதற்கிடையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள விஜயகுமாரின் வீட்டிற்கு மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் வருவதாக தகவல் பரவியது. இதையடுத்து கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செந்தில்குமார், சுகுணா மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு வலங்கைமான் குடமுருட்டி ஆற்றுப்பாலத்தில் இரும்பு தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அனுமதி மறுப்பு
அப்போது அந்த வழியாக வந்த ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வலங்கைமானுக்குள் நுழைய போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாரை கண்டித்து மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் ஸ்ரீதர் வாண்டையார் மட்டும் செல்ல போலீசார் அனுமதித்தனர். இந்த மறியலால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் இருபுறமும் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டி
பின்னர் ஸ்ரீதர் வாண்டையார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டம் பாதுகாப்பாக இருக்கும் என்ற முறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கலவரத்திற்கு போலீசார் உரிய விசாரணை நடத்தாததே காரணம். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் கலவரம் ஏற்பட்டு இருக்காது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.