தூத்துக்குடியில்ஆகாயத்தாமரையில் இருந்து மதிப்பு கூட்டுபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை

தூத்துக்குடியில், ஆகாயத்தாமரையில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிஜிதாமஸ் வைத்யன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-20 18:45 GMT

தூத்துக்குடியில், ஆகாயத்தாமரையில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிஜிதாமஸ் வைத்யன் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலவலகத்தில் ஆகாயத்தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் மகளிர் கூட்டமைப்பினருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் இருந்து ஆகாயத்தாமரையை எவ்வாறு சேகரிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆகாயத்தாமரை

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன் பேசும் போது, மாவட்டத்தில் கனிமொழி எம்.பி.யின் முயற்சியால், ஆகாயத் தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பல்வேறு அழகு பொருட்கள் தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அப்போது, தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்வது தான் பிரச்சினையாக இருப்பதாக கூறினார்கள். இதனால் விற்பனை செய்வதற்கான நிறுவனத்தை அழைத்து வந்து உள்ளோம். அவர்களுடன் இணைந்து செயல்படுகிறோம். உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தொழிற்சாலை

தூத்துக்குடியில் ஆகாயத்தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட கூடைகள், அழகு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கான இடம் மற்றும் கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் ஒதுக்கி உள்ளார். விரைவில் இந்த தொழிற்சாலை தொடங்கப்படும். தற்போது இந்த பொருட்களை தயாரிப்பதற்கு தூத்துக்குடி சுற்று வட்டாரத்தில் இருந்து மூலப்பொருட்களான ஆகாயத்தாமரை தேவைப்படுகிறது. பஞ்சாயத்துகளில் ஆகாயத்தாமரையை சேகரிப்பவர்களுக்கு தேவையான பயிற்சியும் அளிக்கப்படும். தொழிற்சாலை தொடங்கப்பட்ட பிறகு உற்பத்தி பொருட்களை தொடர் ந்து வினியோகம் செய்ய வேண்டும்' என்று கூறினார்.

பஞ்சாயத்து தலைவர்கள் ஒத்துழைப்பு

பின்னர் மகளிர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் ஆகாயத்தாமரை அதிகமாக உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து ஆகாய தாமரையை பெறுவதற்கு பஞ்சாயத்துகளின் உதவி தேவைப்படுகிறது. ஜார்கண்டில் உள்ள ஒரு நிறுவனம் ஏற்கனவே இது போன்ற பொருளை தயாரித்து வருகின்றனர். அவர்கள் தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கி கொள்ள தயாராக இருக்கின்றனர்.

ஆகையால் தூத்துக்குடியில் ஆகாயத்தாமரையில் இருந்து பொருட்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுவில் உள்ள 25 பேர் இயக்குனராக இருப்பார்கள். இந்த தொழிற்சாலை அமைப்பதற்கான இடம் மற்றும் கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் ஒதுக்கி தந்து உள்ளார். இந்த தொழிற்சாலையில் பணியாற்ற 600 பேர் தேவைப்படுகிறார்கள். ஆகையால் பஞ்சாயத்து தலைவர்கள் இந்த பணியில் ஈடுபட விரும்பும் மகளிரை ஊக்குவித்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினர்.

வளர்ச்சி பணிகள் ஆய்வு

கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரியப்பன் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள், ஆகாயத்தாமரை கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிவேலாயுதம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்