தூத்துக்குடியில்ரூ.60 லட்சம் பொட்டாஷ் உரம் கடத்தல்;2 பேர் அதிரடி கைது
தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் பொட்டாஷ் உரம் கடத்தப்பட்டது தொடர்பாக 2 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.;
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் பொட்டாஷ் உரத்தை கடத்திய 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
120 டன் பொட்டாஷ் உரம்
ரஷியாவில் இருந்து 33 ஆயிரம் டன் பொட்டாஷ் உரம் ஏற்றிய எம்.வி.பேட். குளோரி என்ற சரக்கு கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு நேற்று முன்தினம் வந்தது. அங்கிருந்து ஏராளமான லாரிகள் மூலம் தூத்துக்குடி பகுதியில் உள்ள குடோன்களுக்கு உரம் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று.
அப்போது சுமார் 120 டன் உரம் ஏற்றிய 4 லாரிகள், சரக்குகளை இறக்கி வைக்க வேண்டிய இடத்திற்கு செல்லாமல் திடீரென மாயமானது.
போலீசார் விரைந்தனர்
இந்த நிலையில் அந்த 4 லாரிகளில் ஏற்றப்பட்ட உரம் தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே முள்ளக்காடு ராஜீவ்நகர் பகுதியில் உள்ள தனியார் உப்பு குடோனில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து குடோன் மேலாளர், முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர், தனிப்பிரிவு போலீசார் ஜான்சன், செல்வின் ராஜ், ஏட்டு அருணாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ேசாதனை செய்தனர்.
ரூ.60 லட்சம்
அப்போது, 120 டன் பொட்டாஷ் உரங்கள் தனியார் குடோனில் தார்பாயில் விரிக்கப்பட்டு அதன் மீது உரத்தைக் கொட்டி 50 கிலோ வீதம் சாக்கு மூட்டையாக பேக்கிங் செய்யப்பட்டு இருந்தது.
மேலும் இதனை பிரபல உர கம்பெனிகளின் பெயரில் போலியாக சாக்கு மூட்டைகளில் அடைத்து நெல்லை மாவட்டம் களக்காடு பகுதிக்கு கடத்த இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடத்தலுக்காக அந்த பகுதியில் உள்ள சில உப்பள தொழிலாளர்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து சுமார் ரூ.60 லட்சம் மதிப்பிலான உரம், பேக்கிங் எந்திரம், 1 லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த குடோனுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
2 பேர் கைது
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்த தவசி முத்து மகன் மாதவன் (வயது 35), தூத்துக்குடி பால்பண்ணை நகரைச் சேர்ந்த மதியழகன் (55) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இந்த கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் பொட்டாஷ் உரத்தை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.