தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

தூத்துக்குடியில் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

Update: 2022-10-30 18:45 GMT

தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்திவிழாவை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் பெரியசாமி மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஜெயந்தி விழா

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி 3-வது மைலில் உள்ள முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முத்துராமலிங்க தேவர் 115-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு 3-வது மைலில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கனிமொழி எம்.பி, மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க.செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி 3-வது மைலில் உள்ள முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநிலஅமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாநில மருத்துவ அணி துணைச்செயலாளர் ராஜசேகர், அவைத்தலைவர் திருபாற்கடல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில், மேற்கு பகுதி செயலாளர் முருகன் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

பசும்பொன் முத்தராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத்தலைவர் இசக்கிராஜாதேவர் தலைமையில் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் தேவர் உருவச்சிலைக்கு அபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், மாநில அமைப்பு செயலாளர்கள் வள்ளிக்கன்னுத்தேவர், செல்ல சக்திதேவர், முத்துகிருஷ்ணன், ராஜசேகர், மாநில இளைஞரணி செயலாளர் சுந்தர்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ, ஊடக பிரிவு மாநில செயலாளர் முத்துமணி, மாநகர் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகேஷ், மாநகர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பிரவின் துரை, தெற்கு மாவட்ட துணை தலைவர் சங்கர், காமாட்சிதனபால், மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மண்டல தலைவர் சேகர், மாநகராட்சி கவுன்சிலர் சந்திரபோஸ் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

ஐ.என்.டி.யு.சி.

தூத்துக்குடி 3-வது மைலில் உள்ள அவரது உருவச்சிலைக்கு ஐ.என்.டி.யு.சி மாநில பொது செயலாளரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில்  பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா-அ.ம.மு.க.

தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் பொதுச் செயலாளர் சத்தியசீலன், மாவட்ட துணைத்தலைவர் வாரியார், ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், அ.ம.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் பிரைட்டர், மாநில மகளிர் அணி இணை செயலாளர் சண்முககுமாரி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜேசுவரி, சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ரவிசேகர், மாவட்ட துணை செயலாளர் தேவராஜ், மாவட்ட பிரதிநிதி பழனிவேல், தொண்டர் அணி செயலாளர் முத்துசெல்வம், மீனவர் அணி செயலாளர் விக்ரம், மாநகர செயலாளர் உதயசூரியன், மாநகர அவைத்தலைவர் மதியழகன், நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வேல்ராஜ், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஜவகர், மாவட்ட துணை செயலாளர் அக்பர், தெற்கு மாவட்ட ம.தி.மு.க சார்பில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், மாணவரணி துணைச்செயலாளர் சரவணபெருமாள், இளைஞர் அணி துணைச்செயலாளர் வீரபொம்முதுரை, தூத்துக்குடி வ.உ.சி பேரவை சார்பில் கீதா செல்வமாரியப்பன், பேராசிரியர் வேலம்மாள், மகளிர் அணி செயலாளர் கோமதி உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் டூவிபுரத்தில் அ.ம.மு.க. 30-வது வட்ட செயலாளர் காசிலிங்கம் தலைமையில் கட்சியினர் அலங்கரித்து வைக்கப்பட்ட முத்துராமலிங்கதேவர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 30 பள்ளிக்கூட குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்