தூத்துக்குடியில்தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-03 18:45 GMT

தூத்துக்குடியில் பயிர்க்கடன் வழங்கியதில் பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் ஜேசுராஜன், மாவட்ட துணைத்தலைவர் தம்பிராஜ், இணை செயலாளர்கள் ஜெயலட்சுமி, உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் மாவட்ட ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க செயலாளர் மாரியப்பன், அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் பயிர்க்கடன் வழங்குவதில் விதிமீறல்கள் என்று பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும், கடன் தள்ளுபடி திட்டத்தில் பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் ஆகியவற்றுக்கு வட்டி இழப்பு இன்றி சங்கங்களுக்கு வழங்கப்பட வேண்டும், தவணை தவறிய நகைக்கடன் மீது ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் ஏற்பட்ட இழப்பு தொகைக்கு சங்க பணியாளர்களை பொறுப்பாக்கி ஓய்வு கால நிதிப்பயனை நிறுத்தி வைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், ரேஷன் கடை பணியாளர்கள் பிரச்சினையை கண்டறிய குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் நெல்சன், குமார், ஜவகர், கோபால், கென்னடி, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்