தூத்துக்குடியில்கடைகளில் போலி பில் கொடுத்து ரூ.8 லட்சம் மோசடி:முகவருக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடியில் கடைகளில் போலி பில் கொடுத்து ரூ.8 லட்சம் மோசடி செய்த மொத்த விற்பனைக்கடை முகவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.;
தூத்துக்குடியில் சில்லறை விற்பனை கடைகளில் போலி பில் கொடுத்து ரூ.8 லட்சம் மோசடி செய்த மொத்தவிற்பனைக் கடை முகவரை போலீசார் தேடிவருகின்றனர்.
வசூல் முகவர்
தூத்துக்குடி தெற்கு ராஜா தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 30). இவர் பருப்பு, எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய கடையில் எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டை சேர்ந்த சவரிராஜ் மகன் ஜோ விமல் டோனி என்பவர் விற்பனையாளராகவும், வசூல் முகவராகவும் வேலைபார்த்து வந்தார். இவர் சில்லறை விற்பனை கடைகளில் ரசீது கொடுத்து பணத்தை பெற்று, தான் வேலைபார்த்து வந்த கடையில் செலுத்தி வந்துள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இவர் சரிவர பணத்தை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
ரூ.8 லட்சம் மோசடி
இந்த நிலையில் திடீரென வேலைக்கு வராமல் நின்றுவிட்டாராம். இதனால் விக்னேஷ் தன்னிடம் உள்ள பில்லை சில்லறை விற்பனை கடைகளில் கொடுத்து பணத்தை கேட்டு உள்ளார். அப்போது அந்த பில்லை போலியாக கலர் ஜெராக்ஸ் எடுத்து அந்த கடைகளில் ஏற்கனவே கொடுத்து ஜோ விமல் டோனி பணத்தை பெற்று இருப்பது தெரியவந்தது. இந்த வகையில் ரூ.8 லட்சத்து 92 ஆயிரம் வரை பணம் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
வலைவீச்சு
இது குறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள், வழக்குப்பதிவு செய்து வசூல் முகவரை தேடிவருகிறார்.