தூத்துக்குடியில்கட்டிட தொழிலாளியை கொலை செய்ய முயன்றவருக்கு 3 ஆண்டு ஜெயில்

தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளியை கொலை செய்ய முயன்றவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-27 18:45 GMT

தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளியை கொலை செய்ய முயன்றவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

கட்டிட தொழிலாளி

தூத்துக்குடி 3-வது மைல் சங்கர் காலனியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 53). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 7.8.2017 அன்று மாலையில் வேலைக்கு சென்று விட்டு திரு.வி.க நகர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தாராம். அங்கு உள்ள ஒரு கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சிகரெட் வாங்க சென்று உள்ளார். அவர் சிகரெட் வாங்கி விட்டு மீண்டும் வந்த போது, மோட்டார் சைக்கிளை காணவில்லை.

அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த திரு.வி.க.நகரை சேர்ந்த வேல்சாமி மகன் காளியப்பன் என்ற காடை காளியப்பன் (30) என்பவரிடம் மோட்டார் சைக்கிள் குறித்து கேட்டு உள்ளார்.

3 ஆண்டு ஜெயில்

இதில் ஆத்திரம் அடைந்த காளியப்பன் என்ற காடை காளியப்பன் மறைத்து வைத்து இருந்த கத்தியால் முருகனை குத்தினார். இதில் முருகன் பலத்த காயம் அடைந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து காளியப்பன் என்ற காடை காளியப்பனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குபேரசுந்தர், குற்றம் சாட்டப்பட்ட காளியப்பன் என்ற காடை காளியப்பனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்