தூத்துக்குடியில் துப்பாக்கியுடன் 2 ரவுடிகள் கைது
தூத்துக்குடியில் துப்பாக்கியுடன் 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தாமோதர நகரை சேர்ந்தவர் முனியசாமி (வயது 47). தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் ஜான்சன் (42). ரவுடிகளான இவர்கள் மீது தூத்துக்குடி மத்தியபாகம், தென்பாகம், ஆறுமுகநேரி, பாளையங்கோட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயிலில் இருந்து வெளியில் வந்த 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இவர்கள் தொடர்ந்து வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இதனால் அவர்கள் மீது பல வழக்குகளில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து 2 பேரையும் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தனிப்படையினருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து தூத்துக்குடி நகர தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அவர்கள் 2 பேரும் திருவள்ளூர் மாவட்டம் எழுவூர் கலைஞர் நகரில் பதுங்கியிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் தனிப்படையினர் கைது செய்தனர். அப்போது ஜான்சனிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரையும் தனிப்படையினர் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் ஒப்படைத்தனர்.
----