தூத்துக்குடி மாவட்டத்தில்விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் விடுமுறை முடிந்து திங்கட்கிழமை பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. மாணவர்கள் முககவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 111 உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள், 218 மேல்நிலைப்பள்ளிக்கூடங்கள், 133 மழலையர் பள்ளிக்கூடங்கள், 24 இளம் மழலையர் பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிக்கூடங்களில் கடந்த மாதம் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகள் முடிந்த பிறகு கடந்த ஒருவாரமும் மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் நேற்று காலை முதல் வழக்கம் போல் உற்சாகமாக பள்ளிக்கூடத்துக்கு சென்றனர்.
மேலும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் முன்னெச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் முன்னெச்சரிக்கையாக முககவசம் அணிந்து வருமாறு பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி மாணவ, மாணவிகள் முககவசம் அணிந்து வந்தனர்.