தேனி மாவட்டத்தில் 12 குறுவட்டங்களில் கரும்பு பயிருக்கு காப்பீடு
தேனி மாவட்டத்தில் 12 குறுவட்டங்களில் உள்ள விவசாயிகள் கரும்பு பயிருக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்;
தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அழகு நாகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில், இந்த ஆண்டு கரும்பு பயிருக்கு ஆண்டிப்பட்டி, கண்டமனூர், ராஜதானி, போடி, ராசிங்காபுரம், கோடாங்கிபட்டி, தேவதானப்பட்டி, தென்கரை, தேனி, மயிலாடும்பாறை, சின்னமனூர், கம்பம் ஆகிய 12 குறுவட்டங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இந்த குறுவட்டங்களின் கீழ் வரும் அனைத்து வருவாய் கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், தேனி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தில், கரும்பு பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.2,600 காப்பீட்டு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதிக்கு பிறகு கரும்பு சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். பொதுசேவை மையங்கள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவை மூலமாக விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் நடவு முதல் அறுவடை வரையுள்ள பயிர் காலத்தில் ஏற்படும் இழப்புகளுக்கு குறுவட்டம் வாரியாக சோதனை அறுவடை செய்து இழப்பின் அளவை கணித்து பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படும். அந்த வகையில் கடந்த 2019-20-ம் ஆண்டில் பயிர்க்காப்பீடு செய்த 187 விவசாயிகளுக்கு ரூ.41 லட்சத்து 2 ஆயிரம் காப்பீடு நிறுவனத்திடம் இருந்து இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் முன்மொழி விண்ணப்பத்துடன், பதிவு கட்டணம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகம் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு தொகையை செலுத்தி பயன்பெறலாம். காப்பீடு செய்ய ஆகஸ்டு 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.