அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில்மாற்றுக்கட்சியினர் 200 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

கயத்தாறு பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 200 பேர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

Update: 2023-04-09 18:45 GMT

கயத்தாறு பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 200 பேர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

மாற்றுக்கட்சியினர் இணைப்பு

தூத்துக்குடியிலுள்ள கலைஞர் கலையரங்கத்தில் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கயத்தாறு ஒன்றிய பா.ஜ.க. அமைப்பு சாரா தொழிற்பிரிவுதுணைத் தலைவர் மாரியப்பன், அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மாநகர் மாவட்ட அவை தலைவரும், நெல்லை முன்னாள் அரசு குற்றவியல் கூடுதல் வழக்கறிஞரும், கயத்தாறு முஸ்லிம் ஜமாத் தலைவர் பீர்முகைதீன், தொழிலதிபர்கள் இளங்கோவன், சீனிவாசன், செல்வராஜ் உள்ளிட்ட அ.தி.மு.க., பா.ஜ.க.வை சேர்ந்த ஆண், பெண்கள் 200 பேர் நேற்று அந்தக் கட்சிகளில் இருந்து விலகி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

நீர்மோர் பந்தல் திறப்பு

விளாத்திகுளம் பஸ்நிலையத்தில், தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன் ராஜ் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் கீதாஜீவன் நீர் மோர் பந்தல் திறந்து வைத்து அங்கிருந்த பொது மக்களுக்கு நீர், மோர், தர்பூசணி பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி கோடை காலத்தில் தகுந்த உணவுகளை எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், வார்டு செயலாளர்கள் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, புதூர் பஸ் நிலையம் முன்பு நீர் மோர் பந்தலை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சர் திறந்து வைத்தார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

எட்டயபுரம்

மேலும், எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு கோவில்பட்டி தி.மு.க. கிழக்கு ஒன்றியம் மற்றும் எட்டயபுரம் நகர தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், எட்டயபுரம் நகர செயலாளர் பாரதி கணேசன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல் மற்றும் நகர, ஒன்றிய, இளைஞரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு போல்பேட்டை பகுதி கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகிலும், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே, பழைய பஸ்நிலையம் மற்றும் 1-ம் கேட் காந்திசிலை ஆகிய 4 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர், மோர், பழரசம், தர்பூசனி உள்ளிட்டவற்றை வழங்கினார். நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்