நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் என்று வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2022-10-17 18:45 GMT

திருக்கோவிலூர்,


திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் உள்ள அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சராக பதவி வகித்து வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொலைநோக்கு சிந்தனையோடு செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டங்களும் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. முதல்-அமைச்சரின் திட்டங்களை உலக தலைவர்களே பாராட்டுகிற அளவுக்கு உள்ளது. தி.மு.க. தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு வரலாற்று பெருமை உண்டு.

இவரின் தலைமையின் கீழ் தி.மு.க. இருக்கும் நிலையில் பொறுப்பேற்றது முதல் இவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம் கட்சியின் தலைவராக இருக்கிறோம் என்பதை விட தி.மு.க. என்ற குடும்பத்தின் தலைவராக இருந்து ஒவ்வொரு தொண்டனின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வருகிறார். இதுவே தி.மு.க.வை அவர் திறம்பட வழிநடத்திவர முக்கிய காரணமாகும். இதன் காரணமாகவே தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சிக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதி உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

அரசின் உதவிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சி பணிக்கு தேவையான புதிய திட்டங்கள் மற்றும் அதற்கு தேவையான நிதி ஆதாரங்களை நமது மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு, முதல்-அமைச்சரின் கனிவான பார்வைக்கு எடுத்துச் சென்று 100 சதவீதம் நிறைவேற்றி வருகிறார். ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைத்து வகையிலும் அரசின் உதவிகளை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முதல்-அமைச்சர் யாரை அடையாளம் காட்டுகிறாரோ அவர்தான் பிரதமராக முடியும் என்பதையும், ஒட்டுமொத்த இந்தியாவில் பா.ஜனதாவிற்கு எதிராக ஒரு வலுவான தலைமையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தான் நம்பி இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்