கடமலை-மயிலை ஒன்றியத்தில்சுகாதார நிலையம், தொடக்க பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு

கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள சுகாதார நிலையம், தொடக்க பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-03-16 18:45 GMT

தொடக்க பள்ளிகள்

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட கிராமங்களில் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்டமாக கண்டமனூர், அண்ணாநகர் ஆகிய கிராமங்களில் தொடக்க பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

உணவு தரமாக சமைக்கப்பட்டுள்ளதா? சுகாதாரமான முறையில் பரிமாறப்படுகிறதா? என அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காலை உணவு சாப்பிட்ட குழந்தைகளிடம் தினமும் சுவையாக உணவு கிடைக்கிறதா? என்று அவர் கேட்டறிந்தார்.

அதன்பின்னர் அண்ணாநகர் கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட தனிநபர் கழிப்பறை கட்டிடங்கள் மற்றும் சிமெண்டு சாலையை பார்வையிட்டார். இதையடுத்து கடமலைக்குண்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் இருப்பு நிலவரம் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி, கிராமங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.

கலெக்டர் ஆய்வு

அதேபோல மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மற்றும் குறைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து மயிலாடும்பாறை யூனியன் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்த ஆவணங்களை பார்வையிட்டார்.

பின்னர், கண்டமனூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதுராமச்சந்திராபுரம் கிராமத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் மூலம் செயல்பட்டு வரும் சிறிய அளவிலான மாவு அரைக்கும் ஆலையின் செயல்பாடுகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ், பெரியகுளம் கோட்ட உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர்கள் திருப்பதிமுத்து, அய்யப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்