கடமலை-மயிலை ஒன்றியத்தில் விளைச்சல் அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி

கடமலை-மயிலை ஒன்றியத்தில் விளைச்சல் அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது

Update: 2022-09-13 17:04 GMT

கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக மரங்களில் தேங்காய் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் தேங்காய் விலை நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 1 டன் தேங்காய் ரூ.26 ஆயிரத்துக்கும், 1 தேங்காய் ரூ.12 வரையிலும் விற்பனையானது. ஆனால் தற்போது 1 டன் தேங்காய் ரூ.22 ஆயிரத்திற்கும், 1 தேங்காய் ரூ.9 வரை மட்டுமே விற்பனையாகிறது. தொடர்ந்து விளைச்சல் அதிகரிப்பதால் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதற்கிடையே விளைச்சல் அதிகரிப்பால் குடோன்களில் தேங்காய்கள் தேக்கமடைந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு தேங்காய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதும் விலை வீழ்ச்சிக்கு காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து வெளிமாநில இறக்குமதியை குறைக்க வேண்டும், மேலும் தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்