ஆண்டிப்பட்டியில்வாடகை செலுத்தாத கடைகளுக்கு பூட்டு போட்டதை கண்டித்து மறியல்

ஆண்டிப்பட்டியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு பூட்டுபோட்டத்தை கண்டித்து வாடகைதாரர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-30 18:45 GMT

ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமாக நகரில் பல இடங்களில் வணிக வளாகங்கள் உள்ளன. இவற்றை வாடகை ஒப்பந்தம் மூலம் ஏலம் எடுப்பவர்கள் மாத வாடகை செலுத்தி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான 5 கடைகளை ஏலம் எடுத்தவர்கள் கடந்த பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் நேற்று பேரூராட்சி பணியாளர்கள் வாடகை செலுத்தாத பஸ் நிலையத்தில் உள்ள 5 கடைகளை அடைத்து பூட்டு போட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடைக்காரர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஆண்டிப்பட்டி பஸ் நிலையம் முன்பு மதுரை-தேனி நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆண்டிப்பட்டி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் ஆண்டிப்பட்டி துணை சூப்பிரண்டு ராமலிங்கம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இன்னும் ஒரு வாரத்தில் வாடகை பணம் செலுத்தப்படும் என்று வாடகைதாரர்கள் தெரிவித்தனர். இதற்கு பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் மதுரை-தேனி சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்