சுருளிப்பட்டி ஊராட்சியில் 11 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம்: மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்தனர்
சுருளிப்பட்டி ஊராட்சியில் 11 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் கடிதம் கொடுத்தனர்.
சுருளிப்பட்டி ஊராட்சி
கம்பம் அருகே சுருளிப்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக, வார்டு உறுப்பினர்கள் சிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் புகார் மனு கொடுத்தனர். அதில் ஊராட்சியில் நடந்த முறைகேடுகள் என்று கூறி ஒரு பட்டியலையும் கொடுத்தனர். அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை செய்யாமல் தாமதம் செய்வதாக கூறி மீண்டும் வார்டு உறுப்பினர்கள், கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்த ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள் 11 பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் 11 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறி தனித்தனியாக மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியிடம் கடிதம் கொடுத்தனர்.
ராஜினாமா
அந்த கடிதத்தில், "சுருளிப்பட்டி ஊராட்சியில் 7 மாதங்களாக மன்ற உறுப்பினர்கள் கூட்டம் முறையாகவும், முழுமையாகவும் நடக்கவில்லை. மன்ற தீர்மானம் இல்லாமல் ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்த முறைகேட்டுக்கு நாங்கள் உடந்தையாக இருக்க விரும்பவில்லை.
எனவே, இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்காத ஊராட்சிகளின் ஆய்வாளரான கலெக்டர், ஊராட்சிகள் உதவி இயக்குனர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை கண்டித்து வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறோம்" என்று கூறியிருந்தனர்.