புறையூர் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
புறையூர் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தென்திருப்பேரை:
புறையூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
மக்கள் தொடர்பு முகாம்
ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட புறையூரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. புறையூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமில் வருவாய் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மகளிர் திட்ட துறை, சுகாதாரத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
நலத்திட்ட உதவிகள்
அவற்றை பார்வையிட்ட கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, புதிய குடும்ப அட்டை, மகளிர் சுய உதவிக் கடன் என ரூ. 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
முகாமின் நோக்கம்
முன்னதாக, நிகழ்ச்சிக்கு வந்த கலெக்டரிடம், புறையூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி மாணவிகள், பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். உடனடியாக அதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக கலெக்டர் உறுதி அளித்தார். முகாமில் கலெக்டர் பேசுகையில், அரசு அலுவலகங்களுக்கு சென்று மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மனு அளித்து வரும் நிலையில், அனைத்து அரசு துறை அதிகாரிகளும், ஒரே இடத்தில் பொதுமக்களை தேடி வருவதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம். இதனை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) ராஜேஸ்வரி, வேளாண்மை துறை இணை இயக்குனர் பால தண்டாயுதபாணி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் உலகநாதன், சமூக நல பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ஜெயந்த் கிறிஸ்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஸ்வரன், கோட்ட கலால் உதவி ஆணையர் செல்வநாயகம், தாசில்தார் தாமஸ் அருள் பயஸ், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புஹாரி, ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ், புறையூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.