புஞ்சை காளமங்கலம் ஊராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை
புஞ்சை காளமங்கலம் ஊராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புஞ்சை காளமங்கலம் ஊராட்சியில் வேலம்பாளையம் முதல் ஊனாம் பள்ளம் புதூர் வரை 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பழைய சாலையே உள்ளது. இதேபோல் கணபதிபாளையம் நால் ரோடு முதல் சிவகிரி செல்லும் சாலை, ஆயிக்கவுண்டம்பாளையம் அரசு தொடக்க பள்ளி முதல் கண்ணுடையாம் பாளையம் வரை செல்லும் சாலை பழுதடைந்து 10 ஆண்டுகளாக அப்படியே உள்ளள. இந்த சாலைகள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே மேற்கண்ட சாலைகளை உடனே சீரமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து புஞ்சை காளமங்கலம் ஊராட்சி தலைவர் திலகவதி உதயசூரியன் கூறுகையில், 'மோசமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்று மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். மனுவை பெற்றுக்கொண்ட அவர் உடனே சாலைகளை புதிப்பிக்கவும், குடிநீர் வசதி செய்து கொடுக்கவும் ஆவன செய்வதாக கூறியுள்ளார். எனவே சாலை மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்' என்றார்.