பெரியகுளத்தில் நாய் மீது தேசியக்கொடி போர்த்திய தொழிலாளி கைது
பெரியகுளத்தில் நாய் மீது தேசியக்கொடி போர்த்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை புதிய பஸ் நிலையம் பிரிவு அருகே, கடந்த 3 நாட்களுக்கு முன்பு தெருவில் சுற்றித்திரிந்த நாய் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஒருவர் தெரு நாயை பிடித்து, அதன் மீது இருந்த தேசியக்கொடியை அகற்றினார். இந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் ராஜபாண்டி, பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாய் மீது தேசியக் கொடியை கட்டியவர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், நாய் மீது தேசியக்கொடியை கட்டியது, பெரியகுளம் அருகே உள்ள எ.புதுக்கோட்டை நேருநகரை சேர்ந்த கூலித்தொழிலாளி காமாட்சி (வயது 49) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். நாய் மீது அவர் தேசியக்கொடியை கட்டியதற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.