பெரம்பலூரில் 681 மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 681 மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

Update: 2023-02-08 19:05 GMT

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் இந்து கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உதவி தொகை வழங்கும் "புதுமை பெண்" 2-ம் கட்ட திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காணொலி காட்சி மூலமாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. பின்னர் புதுமை பெண் திட்டத்தில் 2-ம் கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 681 மாணவிகளுக்கு கலெக்டர் கற்பகம் மாதம் ரூ.1,000 வீதம் உதவி தொகைக்கான வங்கி பற்று அட்டையினை வழங்கினார். இதில் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்கனவே முதற்கட்டமாக புதுமை பெண் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 1,671 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வீதம் உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டு, அவர்கள் கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர். இதில், ஆர்.டி.ஓ. நிறைமதி, முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா, கல்லூரி முதல்வர் ரேவதி மற்றும் நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்