நெல்லிக்குப்பத்தில் 30 நிமிடம் ரெயில்வே கேட்டை மூடிய ஊழியர் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
நெல்லிக்குப்பத்தில் 30 நிமிடம் ரெயில்வே கேட்டை ஊழியர் மூடினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நெல்லிக்குப்பம் வழியாக தினசரி ஏராளமான ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, நெல்லிக்குப்பம் ரெயில் நிலையம் அருகே உள்ள சவுக்கு கட்டைகள், ஜல்லிக்கற்கள், சர்க்கரை மூட்டைகள் போன்றவற்றை சரக்கு ரெயில் மூலம் ஏற்றிக்கொண்டு வெளி மாநிலத்திற்கும், வெளி மாவட்டத்திற்கும் கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வாறு ரெயில்கள் செல்லும்போது, நெல்லிக்குப்பம் ஆலைரோடு மற்றும் வைடிப்பாக்கம் ரெயில்வே கேட்டுகள் மூடப்படும்.
இந்த நிலையில் நேற்று மதியம் புவனேஸ்வர்-ராமேஸ்வரத்திற்கு ரெயில் செல்வதற்காக நெல்லிக்குப்பம் ஆலைரோடு மற்றும் வைடிப்பாக்கம் ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டன. தொடர்ந்து புவனேஸ்வர்-ராமேஸ்வரம் ரெயில் நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்தை கடந்து சென்றது. அதன்பின்னர், சென்னையில் இருந்து புதுச்சத்திரம் நோக்கி சரக்கு ரெயில் ஒன்றும் சென்றது. இதைத்தொடர்ந்து மேலும் ஒரு சரக்கு ரெயில் வரவழைக்கப்பட்டு, நெல்லிக்குப்பம் ரெயில் நிலையம் அருகே ஜல்லிகற்கள் ஏற்றி விட்டு சென்றன.
அணிவகுத்து நின்ற வாகனங்கள்
இந்த 3 ரெயில்கள் கடந்து செல்லும் வரை 30 நிமிடம் ஏற்கனவே மூடப்பட்ட 2 ரெயில்வே கேட்டை திறக்கவில்லை. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதில் நெல்லிக்குப்பம் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நோயாளியை ஏற்றுவதற்காக சென்ற ஆம்புலன்சும் சிக்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
இதற்கிடையே ஆத்திரமடைந்த பொதுமக்கள், அங்கிருந்த பெண் ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஒரு ரெயில் சென்ற பிறகு கண்டிப்பாக இடைவெளி நேரம் இருக்கும். ஆனால் நீங்கள் இடைவெளி நேரத்திலும் ரெயில்வே கேட்டை திறக்காமல் மூடிவைத்துள்ளீர்கள். இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றனர். அப்போது அந்த பெண் ஊழியர், இது சம்பந்தமாக ரெயில்வே அதிகாரியிடம் தெரிவிக்கிறோம் என தெரிவித்தார். பின்னர் கேட்டுகள் திறந்ததும், வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.