முத்தையாபுரத்தில்வீடு புகுந்து மளிகை கடைக்காரர் உள்ளிட்ட 3பேருக்கு அரிவாள் வெட்டு

முத்தையாபுரத்தில் வீடு புகுந்து மளிகை கடைக்காரர் உள்ளிட்ட 3பேருக்கு அரிவாள் வெட்டிய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-04 18:45 GMT

ஸ்பிக்நகர்:

முத்தையாபுரத்தில் ஓசியில் தண்ணீர் பாட்டில் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் வீடுபுகுந்து மளிக்கைக்கடைக்காரர் உள்ளிட்ட 3 பேரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதில முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

மளிகைக்கடை

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகன் நாகமுத்து (வயது 48). இவர் முஸ்லிம் தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் தோப்புத் தெருவை சேர்ந்த கனகராஜ் மகன் முகேஷ் என்ற பாக்கிய லட்சுமணன் (22) மற்றும் அவரது நண்பர்கள் 2பேர் நாகமுத்துவின் கடைக்கு சென்றனர். அங்கு அவரிடம் பணம் கொடுக்காமல் ஓசியில் தண்ணீர் பாட்டிலை கேட்டுள்ளனர். அதற்கு கடைக்காரர் மறுக்கவே, அந்த 3 பேரும் சேர்ந்து நாகமுத்துவை அவதூறாக பேசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

பின்பு நாகமுத்து கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். அங்கு இரவு 10 மணி அளவில் நாகமுத்துவின் வீட்டுக்கு முகேஷ் உள்ளிட்ட 3பேரும் வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

வீடுபுகுந்து வெட்டு

திடீரென்று முகேஷ், நாகமுத்துவின் வீட்டின் பின்பக்க வாசல் சுவற்றின் வழியாக ஏறி குதித்து அத்துமீறி அவரது உள்ளே புகுந்துள்ளார். கையில் கொண்டு சென்ற அரிவாளால் நாகமுத்துவை வெட்டியுள்ளார். இதை தடுக்க முயன்ற அவரதுமனைவி சத்தியபாமா (42), மகன் முத்து இசக்கிக்கும் (13) அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் நாகமுத்து குடும்பத்தினர் அலறியுள்ளனர். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததை பார்த்ததும் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

முக்கிய குற்றவாளி சிக்கினார்

இதில் காயம் அடைந்த 3 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவண ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் அல்லி அரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முகேஷை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓசி தண்ணீர் பாட்டில் தரமறுத்த மளிகைக்கடைக்காரர் வீடுபுகுந்து 3 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்