மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

Update: 2022-09-04 15:27 GMT

விருத்தாசலம், 

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து அமைப்பினர், பொதுமக்கள் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினா். அந்த வகையில் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பகுதியில் 23 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை 3-வது, 5-வது நாளில் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

அந்த வகையில் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் வைத்து பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், கரைப்பதற்காக ஓட்ட பிள்ளையார் கோவிலுக்கு டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற விநாயகா் சிலைகள் ஊர்வலத்தை ஆடுதுறை திருமூலர் ஆதீனம் சீனிவாச சுவாமிகள், இந்து முன்னணி கோட்ட தலைவர் சிவாஜி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க. பட்டியல் இன அணி மாநில தலைவர் தடா பெரியசாமி தொடங்கி வைத்தார்.

நீர்நிலைகளில் கரைப்பு

ஊர்வலமானது ஓட்ட பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு புது நெசவாளர் தெரு, பஜனை மட தெரு, மெயின் ரோடு, சுப்பிரமணிய கோவில் தெரு, கர்நத்தம் ரோடு, தேரடி வீதி வழியாக வந்து மீண்டும் ஓட்ட பிள்ளையார் கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து அனைத்து சிலைகளும் மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. இதேபோல் மங்கலம்பேட்டையை சுற்றியுள்ள ஊர்களில் வைக்கப்பட்டிருந்த 18 சிலைகளும், அந்தந்த பகுதி நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

300 போலீசாா் பாதுகாப்பு

விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டுகள் கடலூர் சக்திகணேசன், கள்ளக்குறிச்சி பகலவன் ஆகியோர் தலைமையில் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விருத்தாசலம் முருகேசன், விருத்தாசலம் (கலால்) சக்தி, மங்கலம்பேட்டை விஜயகுமார், பெண்ணாடம் குமார், திட்டக்குடி அன்னக்கிளி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சில்வா் பீச்

விநாயகர் சதுர்த்தி அன்று கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொது இடங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் 3 மற்றும் 5-வது நாளில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் கரைக்கப்படுவது வழக்கம். அதன்படி 3-வது நாளில் 400-க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த நிலையில் 5-வது நாளான நேற்று கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 26 விநாயகர் சிலைகள் சில்வர் பீச்சுக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அந்த சிலைகளை தூக்கிச் சென்று கடலில் கரைத்தனர். இதையொட்டி அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்