மதுரையில், இணையதளத்தில் அறிவிப்பு செய்து ஒத்திக்கு விடுவதாக ஒரே வீட்டை காண்பித்து பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் கைது
வீட்டை ஒத்திக்கு விடுவதாக இணையதளத்தில் அறிவிப்பு செய்து பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
வீட்டை ஒத்திக்கு விடுவதாக இணையதளத்தில் அறிவிப்பு செய்து பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
வீடு ஒத்திக்கு விடுவதாக....
மதுரை ஆனையூர் மலர்நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசபாண்டியன். இவருடைய மகன் ஸ்ரீபுகழ் இந்திரா (வயது 41). இவர் தனக்கு சொந்தமான ஆனையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை ஒத்திக்கு விடுவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்தார். அதை பார்த்த சிலர் அவரை அணுகினர்.
அவ்வாறு அணுகிய அனைவரிடமும் ஒரே வீட்டை காண்பித்து மீனாம்பாள்புத்தை சேர்ந்த ராஜேந்திரனிடம் ரூ.7 லட்சமும், கூடல்நகரை சேர்ந்த பாலமுருகனிடம் ரூ.8 லட்சமும், ஆவின்நகரை சேர்ந்த புவனேஸ்வரியிடம் ரூ.7 லட்சமும், அரசரடி சரோஜாவிடம் ரூ.8 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் வாங்கி உள்ளார்.
ரூ.30 லட்சம் மோசடி
பணத்தை வாங்கி கொண்டு அவர் வீட்டை கொடுக்காததால் பணம் கொடுத்தவர்கள் தினமும் அவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர். பின்னர் அவர் பணத்தை மோசடி செய்தது அவர்களுக்கு தெரியவந்தது. இது குறித்து அவர்கள் அனைவரும் கூடல்புதூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீபுகழ் இந்திரா, அவரது தந்தை, தாயார் மற்றும் அவரது மனைவி, மகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ரூ.30 லட்சத்தை மோசடி செய்த ஸ்ரீபுகழ் இந்திராவை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஆனையூர் பகுதியில் ஒரு வீட்டை ஒத்திக்கு விடுவது போன்று இணையதளம் மூலம் தெரிவித்துள்ளனர்.. அதை நம்பி வருபவர்களிடம் வீட்டை காலி செய்வது போன்று பொருட்களை எல்லாம் மூடையாக கட்டி வைத்து இருப்பதை காண்பிப்பார். பின்னர் வேறு வீட்டிற்கு செல்வதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி அவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி மோசடி செய்துள்ளார்.
ஏற்கனவே இவர் மீது தல்லாகுளம் போலீசில், பெண் ஒருவரின் உறவினருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 47 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வழங்கு உள்ளது. இதுபோன்று இணையதளத்தில் விளம்பரம் செய்வதை பார்த்து பொதுமக்கள் ஏமாறாமல் நேரில் சென்றும், அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தும் பணத்தை கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.