கும்பகோணத்தில், செங்கல் தயாரிப்பு பணி மும்முரம்

கும்பகோணத்தில் கட்டுமான பணிகள் அதிகரித்து வருவதால் செங்கல் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2023-08-27 20:25 GMT

கும்பகோணத்தில் கட்டுமான பணிகள் அதிகரித்து வருவதால் செங்கல் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.

முக்கிய மூலப்பொருள்

கட்டுமான பணிகளுக்கு முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது செங்கல். தற்போது 'ஹாலோ பிரிக்ஸ்' கற்கள் பயன்பாட்டுக்கு வந்து வர்த்தக ரீதியாக கடும் போட்டியை ஏற்படுத்தி இருந்தாலும் செங்கலின் பயன்பாடும், மவுசும் இன்னமும் குறையாமல் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.

செங்கலுக்கு தேவை எப்போதும் உள்ளது. ஒரு செங்கல் சூளை அமைக்க 1 ஏக்கர் பரப்பளவுக்கு இடம் தேவை. இந்த தொழிலில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஏறக்குறைய 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

வீடு கட்டும் பணிகள்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஒருசில இடங்களில் 3 போக நெல் சாகுபடி ஒரு போக சாகுபடியாக மாறி விட்டது.

மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. வீடு கட்டுமான பணிகளும் அதிகரித்து வருவதால் செங்கல் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் கும்பகோணத்தில் தற்போது செங்கல் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மண் வளம்

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம், உடையாளூர் போன்ற பகுதிகளில் களிமண்ணுடன், மணல் கலந்து செங்கல் தயாரிப்பதற்கு ஏற்ற மண் வளம் உள்ளது. தற்போது கும்பகோணத்தில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் செங்கல் உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதுகுறித்து கும்பகோணம் உடையாளூர் பகுதியை சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

மண் விலை

கடந்த ஆண்டு மழையால் செங்கல் உற்பத்தி பாதித்தது. இதனால் இந்த ஆண்டு பலரும் உற்பத்தியை தொடங்கவில்லை. கடந்த ஆண்டு ரூ.6-க்கு விற்பனை செய்யப்பட்ட நாட்டுக்கல் என்று சொல்லக்கூடிய 1 செங்கல் இந்த ஆண்டு ரூ.7 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது.

செங்கல் விலை உயர்ந்ததால் மற்ற கூலிகளும் உயர்ந்து விட்டது. 1 குழி மண் ரூ.15 ஆயிரத்துக்கு கிடைக்கிறது. இது கடந்த ஆண்டை விட அதிகம் தான். சிலருக்கு போதிய அளவு மண் கிடைப்பதில்லை.

மழை நீரில் கரைந்து விடுகிறது

மண் இல்லாத காரணத்தால் சிலர் மீண்டும் விவசாயத்திற்கே திரும்பிவிட்டனர். ஒரு செங்கல் தயாராக 15 நாட்கள் வரை ஆகிறது. 1 லட்சம் செங்கல் தயாரித்தால் அதில் 90 ஆயிரம் கற்கள் தான் மிச்சப்படும்.

மழைக்காலங்களில் உற்பத்தி செய்து வைக்கப்படும் செங்கல் நீரில் நனைந்து விடுகிறது. அதேபோல் செங்கல் உற்பத்திக்கு சேகரித்து வைக்கப்படும் மண்ணும் மழைநீரில் கரைந்து போய் விடுகிறது. எனவே மழைக்காலங்களில் வேலையின்றி வருமானத்தை இழந்து தவிக்கும் செங்கல் சூளை தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அரசு நிதிஉதவி அளித்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முன் வரவேண்டும்'

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்