கூத்தாநல்லூரில், பூங்கா அமைக்கப்படுமா?

கூத்தாநல்லூரில் பூங்கா அமைக்கப்படுமா? என்று பொது மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-05-23 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூரில் பூங்கா அமைக்கப்படுமா? என்று பொது மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ரேடியோ பார்க்

கூத்தாநல்லூர் பெரியக்கடைத்தெரு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அமைந்துள்ள இடம் ரேடியோ பார்க் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம், அங்குள்ள வளாகத்தில் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ரேடியோ ஒன்று பொருத்தப்பட்டு அதில் இடம் பெறும் நிகழ்ச்சிகளை பொது மக்கள் கேட்டு வந்தனர்.

இதனால் அந்த இடம் நாளடைவில் ரேடியோ பார்க் என்று அழைக்கப்பட்டது. அப்போது அதிகளவில் வீடுகளில் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் இல்லாததால், அப்பகுதி மக்கள் ரேடியோ பார்க்குக்கு சென்று ரேடியோவில் ஒலிபரப்பப்படும் செய்திகள், பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகளை கேட்டு வந்தனர்.

விளையாட்டு சாதனங்கள்

மேலும், அதே ரேடியோ பார்க்கில் சிறுவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டது. அதனால் சிறுவர்கள் ரேடியோ பார்க்கிற்கு சென்று விளையாடி வந்தனர். நாளடைவில் பொதுமக்கள் வீட்டுக்கு வீடு ரேடியோ மற்றும் டி.வி. வாங்கிய நிலையில், ரேடியோ பார்க்கிற்கு செல்வதை அப்பகுதி மக்கள் நிறுத்தி விட்டனர்.

அதையடுத்து ரேடியோ பார்க் போதிய பராமரிப்பு இல்லாமல், சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு சாதனங்கள் சேதமடைந்து உள்ளது. மேலும் தற்போது புதர்மண்டி காணப்படுகிறது. ஆனாலும் இன்று வரை ரேடியோ பார்க் என்று தான் அழைக்கப்படுகிறது. கூத்தாநல்லூர் பகுதிக்கு அன்று ரேடியோ பார்க் ஒரு சிறந்த பொழுது போக்கு இடமாகவே இருந்தது.

பொழுது போக்கு பூங்காவாக..

ஆனால் தற்போது முழுமையான பராமரிப்பு இல்லாததால் பயனற்று கிடக்கிறது. அதனால் இன்றைய காலத்தில் கூத்தாநல்லூர் பகுதியில் ஒரு பொழுது போக்கு இடம் இல்லாமல் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த ரேடியோ பார்க் வளாகத்தை சீரமைத்து தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்றவாறு நவீன சாதனங்கள் மற்றும் இருக்கைகள் அமைத்து பொழுது போக்கு பூங்காவாக மாற்றித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்