'இளங்கன்று பயம் அறியாது' பாம்பை கையில் பிடித்து விளையாடிய 4 வயது சிறுமி

'இளங்கன்று பயம் அறியாது' என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் பாம்பை கையில் பிடித்து 4 வயது சிறுமி விளையாடினாள். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2022-06-02 15:18 GMT

 குன்னூர்

'இளங்கன்று பயம் அறியாது' என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் பாம்பை கையில் பிடித்து 4 வயது சிறுமி விளையாடினாள். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இளங்கன்று பயம் அறியாது

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். அந்த அளவுக்கு பாம்புகளிடம் பொதுமக்களுக்கு அச்சம் உள்ளது. அதற்கு காரணம் பாம்புகளிடம் இருக்கும் கொடிய விஷம்தான்.

அதேநேரம் இளங்கன்று பயம் அறியாது என்ற பழமொழியும் உள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில் 4 வயது சிறுமி தன்னுடைய வீட்டு அருகே வந்த பாம்பை தனது கைகளால் பிடித்து விளையாடி அக்கம் பக்கத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளாள்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

4 வயது சிறுமி

குன்னூர் அருகேயுள்ள உபதலை ஆலோரை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களின் மகள் ஸ்ரீ நிஷா (வயது 4).  ஸ்ரீ நிஷா தனது வீட்டின் முன்புறம் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அவளின் வீட்டின் வாசலில் நான்கு அடி நீளமுள்ள பாம்பு ஒன்று வந்துள்ளது. வீட்டில் இருந்தவர்கள் பாம்பை கண்டு அச்சப்பட்டனர். ஆனால் சிறுமி ஸ்ரீநிஷா யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த பாம்பினை பிடித்து கையில் வைத்துள்ளார். இதனை கண்ட அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

வீடியோ வைரல்

ஸ்ரீ நிஷா எவ்விதமான அச்சமுமின்றி நீண்ட நேரம் பாம்பினை கையில் வைத்து விளையாடினாள். பின்னர் அருகே இருந்த பாம்பு பொந்துக்குள் பாதுகாப்பாக விடுவித்தாள். இதனை அருகே இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாம்பினை கண்டதும் அதனை அடித்து கொல்லும் மக்களிடையே அதனை பிடித்து பாதுகாப்பாக விடுவித்த சிறுமியின் தைரியத்தை அப்பகுதி மக்கள்பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்