ஈரோட்டில் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்

விஷம் குடித்து வியாபாரி தற்கொலை

Update: 2022-06-29 19:55 GMT

ஈரோட்டில் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். சாவுக்கு காரணமானவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வியாபாரி தற்கொலை

ஈரோடு கருங்கல்பாளையம் சிந்தன்நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 42). பழைய இரும்பு வியாபாரி. இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வெங்கடேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று, வெங்கடேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வெங்கடேசின் உறவினர்கள் நேற்று காலை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் நேற்று மதியம் 1.30 மணிஅளவில் வெங்கடேசின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியின் முன்பு திரண்டனர். அவர்கள் திடீரென ஈ.வி.என்.ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

கடந்த 28-ந் தேதி இரவு வெங்கடேஷ் தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது உறவினர் ஒருவர் மது குடிப்பதற்காக வெங்கடேசிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால், அவரை பற்றியும், அவரது குடும்பத்தை பற்றியும் அந்த நபர் தரக்குறைவாக பேசி உள்ளார். அதன்பிறகு வெங்கடேஷ் வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கேயும் அந்த நபர் பின்தொடர்ந்து சென்று வீட்டு வாசலில் நின்று மீண்டும் தரக்குறைவாக பேசி உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த வெங்கடேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் தற்கொலை வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே தற்கொலைக்கு தூண்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போக்குவரத்து பாதிப்பு

வெங்கடேஷ் இறப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். ஆனால் அதை ஏற்க மறுத்த உறவினர்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வெங்கடேஷ் இறப்பு தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விடுவார்கள் என்றும் போலீசார் உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இருந்தாலும், அவர்கள் சாலையோரமாக திரண்டு நின்று கொண்டிருந்ததால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது. இதனால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்