ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
கோபி
கோபி, கொளப்பலூர், சிறுவலூர், நல்லகவுண்டன்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மதியம் கோபி பகுதிகளில் திடீரென கன மழை பெய்தது. 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கன மழையால் நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள சாக்கடைகள் நிரம்பி ஈரோடு- சத்தியமங்கலம் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
மேலும் கோபி முத்துசாமி வீதி, மார்க்கெட், வண்டிப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளின் முன்பாகவும், வீதிகளில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
பவானி
இதேபோல் பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகல் 2.30 மணி முதல் மாலை 3.15 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ரோட்டில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மழைநீருடன், சாக்கடை கழிவுநீரும் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் ரோட்டில் நடமாட முடியாமல் அவதிப்பட்டனர். ரோடுகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
குறிப்பாக பவானி புதிய பஸ் நிலையத்தை அடுத்த நடராஜபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மேட்டூர் ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகலில் நன்றாக வெயில் அடித்தது. பின்னர் மதியம் 1 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. இதைத்தொடர்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 30 நிமிடம் நீடித்தது. இதையடுத்து 2.45 மணி வரை மழை தூறிக்கொண்டே இருந்தது.