பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வியாபாரி குத்திக்கொலை - திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல்லில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்த வாக்குவாதத்தில் வியாபாரி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2022-07-29 03:48 GMT

திண்டுக்கல்:

திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருள் குணசேவியர் (வயது 34). காய்கறி, மர விற்பனை செய்து வந்தார். இவருக்கு லிதியாமேரி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 9.45 மணி அளவில் நண்பரான அதே பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக அருள் குணசேவியர் வேடப்பட்டி நாகம்மா கோவில் அருகில் சென்றுள்ளார்.

அங்கு அவர், வேடப்பட்டி பகுதியை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அருள் குணசேவியருக்கும், அவரின் நண்பர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த நண்பர்களில் ஒருவர், தனது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருள் குணசேவியரை சரமாரியாக குத்தினார். இதில் அவருடைய மார்பு, தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அருள் குணசேவியரை, தகவலறிந்து அங்கு வந்த உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வேடப்பட்டி பகுதியை சேர்ந்த பாலா, மணிகண்டன், குட்டிமணி உள்பட 6 பேர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அருள் குணசேவியருடன் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களுக்கு இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருக்குமோ? என்று சந்தேகித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சென்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அருள் குணசேவியர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் வியாபாரி குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்