சென்னையில், மீன்கள் விலை 'கிடுகிடு' உயர்வு: ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1,400-க்கு விற்பனை

அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலத்தால் வரத்து பாதித்திருக்கும் நிலையில் சென்னையில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2023-07-09 22:38 GMT

சென்னை,

தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் கடந்த ஜூன் 14-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் மீன்கள் வரத்து பாதிக்கப்பட்ட நிலையில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. தடைக்காலம் ஓய்ந்த நிலையில் மீன்கள் வரத்து சீரானது. விலையும் குறைந்தது.

தற்போது அரபிக்கடல் பகுதிகளில் அமல்படுத்தப்பட்டிருக்கும் மீன்பிடி தடைக்காலம் காரணமாக, மீன்கள் வரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மீன்கள் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் விடுமுறை நாளான நேற்று காசிமேடு, வானகரம், சிந்தாதிரிப்பேட்டை, திருவான்மியூர், காவாங்கரை, பெரம்பூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட மீன்மார்க்கெட்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. ஆனால் மீன்கள் விலை தாறுமாறாக இருந்த காரணத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்து தான் போனார்கள்.

மீன்கள் விலை உயர்வு

குறிப்பாக மக்கள் அதிக ஆர்வம் காட்டும் மீன் வகைகளான வஞ்சிரம், வவ்வால் போன்ற மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,300 முதல் ரூ.1,400 வரை விற்பனை ஆனது. சங்கரா ரூ.700 முதல் ரூ.750 வரை விற்பனை ஆனது. வவ்வால் மீன் ரூ.800 முதல் ரூ.820 வரை காணப்பட்டது.

இறால் ரூ.600- வரையிலும், நண்டு ரூ.650 வரையிலும், கிழங்கான் மீன் ரூ.450 வரையிலும் விற்பனை ஆனது. இதர மீன்கள் விலையும் தாறுமாறாக உயர்ந்து காணப்பட்டது. அதேவேளை மத்தி, ஊளி, கிளிச்சை போன்ற சிறிய அளவிலான மீன்கள் விலையில் பெரியளவில் மாற்றம் இல்லை.

இதனால் மக்கள் என்ன செய்வதென்றே புரியாமல் தவித்து போனார்கள். கையில் இருக்கும் காசுக்கு ஏற்ப மீன்களை வாங்கி சென்றனர்.

விலை குறைய வாய்ப்பில்லை

மீன்கள் விலை அதிகரித்துள்ளது குறித்து சென்னை வானகரம் மீன் மார்க்கெட் நிர்வாகி துரை கூறியதாவது:-

பொதுவாகவே சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் தேவைக்காக வெளிமாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுவது வழக்கம். இந்தமுறை அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டிருப்பதால் அங்கிருந்து மீன்கள் வரத்து இல்லை. இதனால் வரத்து பாதிக்கப்பட்டு மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. வரத்து சீராகும் வரை மீன்கள் விலை குறைய வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்