சென்னையில் மின்சார ரெயிலின் அபாய சங்கிலியை இழுத்து கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் -3 பேர் கைது
சென்னையில் மின்சார ரெயிலின் அபாய சங்கிலியை இழுத்து அட்டகாசம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
சென்னை,
சென்னையில் கடந்த சில மாதங்களாக புறநகர் ரெயில்களில் கல்லூரி மாணவர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.பல்வேறு ஆயுதங்களை வைத்து பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர் .இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் நேற்று ரெயிலின் அபாய சங்கிலியை இழுத்து அட்டகாசம் செய்தனர்.
வேளச்சேரி பறக்கும் ரெயிலானது சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை தினமும் இயக்கப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் சென்று வருகின்றனர். இந்த ரெயிலில் கல்லூரி மாணவர்கள் பல்வேறு சேட்டைகளை செய்தனர்.சேப்பாக்கம் ரெயில் நிலையம் முதல், கடற்கரை ரெயில் நிலையம் வரை மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.அவர்கள் பட்டாக்கத்தி மற்றும் பைப்களுடன் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் அங்கும் இங்கும் ஓடினர்.
இதில் சில மாணவர்கள் திடீரென ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர் .இதனால் ரெயில் நின்றது. பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது .
இச்சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .