கருங்குளம் அருகே கோரவிபத்தில் தொழிலாளி பரிதாப சாவு

கருங்குளம் அருகே கோரவிபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2022-11-21 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

கருங்குளம் அருகே நேற்று தனியார் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார். மற்றொரு வாலிபர் படுகாயம் அடைந்துள்ளார்.

தொழிலாளி

கருங்குளம் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த நயினார் மகன் கார்த்தி (வயது 20). தொழிலாளி. நேற்று இவரும், அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் பரமசிவன் (எ) சிவா ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் புளியங்குளத்தில் இருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே நெல்லை-திருச்செந்தூர் சாலையில் சென்றபோது, நெல்லையிலிருந்து ஸ்ரீவைகுண்டம் பகுதியை நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

நேருக்கு நேர் மோதல்

கருங்குளம் அருகே எதிர்பாராத விதமாக தனியார் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கார்த்தியும், சிவாவும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர். இதில் கார்த்தி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து சிறிது நேரத்தில் இறந்து போனார். சிவா படுகாயங்களுடன் சாலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபன்பிள்ளை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து கார்த்தி உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்