பெருந்துறை அருகே கல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
மாணவர் தற்கொலை
பெருந்துறை அருகே கல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
என்ஜினீயரிங் மாணவர்
நீலகிரி மாவட்டம் எடுகாட்டி அருகே உள்ள தோட்டாணி என்கிற இடத்தை சேர்ந்தவர் நடராஜ். இவருடைய மகன் தனுஷ் (வயது 18). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதியில் இயங்கி வரும் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு, கல்லூரி விடுதியில் தன்னுடன் தங்கியிருந்த நண்பர்களுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்ட தனுஷ், வகுப்பறைக்கு செல்லாமல், தனது விடுதி அறைக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வகுப்புக்கு வரவில்லை.
தூக்கில் தொங்கினார்
இதனால் சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் விடுதிக்கு சென்று பார்த்த போது, தனுஷ் தங்கியிருந்த அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்போது மின்விசிறியின் கொக்கியில் லுங்கியை கொண்டு தனுஷ் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருப்பது தெரிந்தது.
தற்கொலை ஏன்?
உடனே அவர்கள் அறையின் கதவை உடைத்து தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த தனுஷை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தனுஷ் இறந்து விட்டதாக கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து கல்லூரி விடுதி கண்காணிப்பாளர் மகேந்திரகுமார், பெருந்துறை போலீசில் இது குறித்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனுஷ் ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.