கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்விழுப்புரம் புதிய கலெக்டர் பழனி பேட்டி
கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாவும், பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட புதிய கலெக்டர் பழனி கூறினார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வந்த மோகன், செய்தி-மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக விருத்தாசலம் சப்-கலெக்டராக பணிபுரிந்து வந்த பழனி, பதவி உயர்வு பெற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சருக்கு நன்றி
விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சுகாதாரம், கல்விவளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
விளிம்புநிலை, கீழ்தட்டுமக்களின் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசு பலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் மக்களிடையே சென்றடைய தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் களப்பணியாற்றி வருகின்றனர். இவர்களை கண்காணிப்பு செய்து திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்வது கலெக்டரின் கடமை, அதற்காக முழுநேரமும் மக்களுக்காக செலவு செய்வேன்.
தொடர்பு கொள்ளலாம்
பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்புகொள்ளலாம். 9444138000 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு குறைகள், புகார்களை தெரிவிக்கலாம். கூட்டத்தில் போனை எடுக்கமுடியாத பட்சத்தில் வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். மாவட்ட நிர்வாகம் வெளிப்படைத்தன்மையோடு செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தர்மபுரியை சோ்ந்தவர்
விழுப்புரம் மாவட்டத்தின் 24-வது கலெக்டராக பொறுப்பேற்றுள்ள பழனி தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர். திருமணமான இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் டாக்டருக்கும், மற்றொருவர் பி.காம். படித்து வருகிறார்கள். வணிகவரித்துறையில் கடந்த 24 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பழனி ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு பெற்று விருத்தாசலத்தில் சப்-கலெக்டராக பணிபுரிந்தார். 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பதவி உயர்வு மூலம் விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.