தீப்பெட்டி தொழில் பாதிப்பு: 'சிகரெட் லைட்டர்' இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் - மத்திய தொழில்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படுவதால் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். .

Update: 2022-09-08 16:24 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படுவதால் வெளிநாடுகளில் இருந்து 'சிகரெட் லைட்டர்' இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய தொழில் துறை மந்திரி பியூஷ் கோயலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்

இதுதொடர்பாக அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தீப்பெட்டி உற்பத்தித் தொழில், தமிழ்நாட்டின் தென்பகுதியில் வேலைவாய்ப்பிற்கான முக்கிய ஆதாரமாக விளங்குவதுடன், அப்பகுதியில் ஒரு பாரம்பரியத் தொழிலாகவும் உள்ளது. இந்த தொழிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.

அப்பணியாளர்களில் பெரும்பாலோர் பெண்கள் ஆவர். மேலும், விவசாயம் செய்ய இயலாத வறண்ட பகுதியில் பொருளாதார வளர்ச்சியின் ஆதாரமாக இத்தொழில் விளங்குகிறது. தீப்பெட்டி ஏற்றுமதி மூலம் சுமார் ரூ.400 கோடி அந்நிய செலாவணி வருவாய் ஈட்டப்படுகிறது.

தற்போது தொழில் துறை மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், ஏற்றுமதி சந்தையில் பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவில் இருந்து கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றினைத் தொடர்ந்து ஏற்பட்ட விநியோக சங்கிலி இடையூறுகள், ஏற்றுமதி தொடர்புடைய செலவீனம் மற்றும் நடைமுறை சிரமங்கள் மேலும் அதிகரித்துள்ளது. உள்ளீட்டு செலவுகளும் பெருமளவு அதிகரித்துள்ளது.

சீனா போன்ற நாடுகளில் இருந்து சட்டப்படியாகவும் சட்டவிரோதமாகவும் இறக்குமதி செய்யப்படும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் வரவால் தீப்பெட்டித் தொழிலின் உள்நாட்டு சந்தை வாய்ப்பு வேகமாக குறைந்து வருகிறது.

இந்த சிகரெட் லைட்டர்கள் ரூ.10-க்கு கிடைப்பது 20 தீப்பெட்டிகளுக்கு மாற்றாக இருக்கும். இருப்பினும் அவை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுகிறது. அதில் பயன்படுத்தும் எரிபொருளின் சுகாதார தாக்கம் இன்னும் அறியப்படவில்லை. இந்த வெளிநாட்டு சிகரெட் லைட்டர்கள் தொடர்ந்து சந்தையைக் கைப்பற்றினால், தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டிலுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.

எனவே, இந்த விஷயத்தில் நீங்கள்(மத்திய மந்திரி பியூல் கோயல்) உடனடியாகத் தலையிட்டு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியை தடை செய்ய வேண்டும். சட்டவிரோத இறக்குமதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்