ஒரே நாளில் 8 கோவில்களில் குடமுழுக்கு

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில் 8 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-10 18:45 GMT

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில் 8 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஜம்புகேஸ்வரர் கோவில்

கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் செய்யப்பட்டு, குடமுழுக்கு நடந்தது. விழாவை முன்னிட்டு 4 கால யாக சாலை பூஜை நடந்து, கடம் புறப்பாடாகி மூலவர் விமான குடமுழுக்கும், அகிலாண்டேஸ்வரி, விநாயகர், முருகன், கஜலட்சுமி, பைரவர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் நேற்று குடமுழுக்கு நடந்தது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் வீரவேல்பிரனேஷ், தக்கார் முருகன், செயல் அலுவலர் அன்பரசன், கணக்காளர் ராஜி, ஊராட்சி மன்ற தலைவர் சுமத்திராசின்னதுரை மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

குத்தாலம்

குத்தாலத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள சவுந்தரநாயகி அம்பாள் உடனாகிய சோழீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் குடமுழுக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்ற, மங்கல வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது. பின்னர் சாமி கருவறை தங்க கலசம், அம்பாள் ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கும், ஒரே நேரத்தில் வேதியர்கள் மந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றி மகா குடமுழுக்கு நடைபெற்றது.

மணல்மேடு

மணல்மேடு அருகே தாழஞ்சேரி ஊராட்சி வரகடை கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், வலம்புரி விநாயகர், அங்காளம்மன் ஆகிய கோவில்களில் குடமுழுக்கு விழா நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ஹோமம், அனுக்ஞை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பின்னர் 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்ற, மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகி கோவில்களின் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து விமான கோபுரங்களை அடைந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் மேற்கண்ட 3 கோவில்களின் விமான கோபுரங்களில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் சிவராமன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இதேபோல் கிராமத்தில் உள்ள பிடாரியம்மன், சக்தி விநாயகர் ஆகிய கோவில்களிலும் நேற்று குடமுழுக்கு நடைபெற்றது.

திருக்கடையூர்

திருக்கடையூர் அருகே மாமாகுடி ஊராட்சியில் ஐயாகோவில் தெருவில் முனீஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. குடமுழுக்கை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க கோவிலை வளம் வந்து விமான கலசங்களை அடைந்தன. பின்னர் சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்