பரமக்குடி 31-வது வார்டில் மக்கள் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு

பரமக்குடி 31-வது வார்டில் மக்கள் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என கவுன்சிலர் ஜெயபாரதி ராதாகிருஷ்ணன் கூறினார்.;

Update:2022-12-26 00:17 IST

பரமக்குடி, 

பரமக்குடி 31-வது வார்டில் மக்கள் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என கவுன்சிலர் ஜெயபாரதி ராதாகிருஷ்ணன் கூறினார்.

31-வது வார்டு

பரமக்குடி நகராட்சிக்குட்பட்டது 31-வது வார்டு. இதில் சவுகத் அலி தெரு, கீழப்பள்ளிவாசல் தெரு, கண்ணகி தெரு, வேளார் தெரு, காந்தி காலனி, அண்ணா நகர், பன்னீர்செல்வம் தெரு, பகவத் சிங் ரோடு, நேதாஜி தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். அதிக வாக்காளர்களை கொண்ட வார்டுகளில் இதுவும் ஒன்று. இந்த வார்டில் தி.மு.க. சார்பில் முதல் முறையாக போட்டியிட்டு நகர் மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர் ஆர்.ஜெயபாரதி ராதாகிருஷ்ணன். இவரது கணவர் ராதாகிருஷ்ணன் 31-வது வார்டு தி.மு.க.செயலாளராக உள்ளார். இவரது மகன் ராஜ்குமார் தி.மு.க.விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகியாக உள்ளார்.

31-வது வார்டின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர் ஆர்.ஜெயபாரதி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

ஹைமாஸ் விளக்கு

நான் நகர்மன்ற உறுப்பினராக வந்த பிறகு நேதாஜி ரோடு, சவுகத் அலி தெரு ஆகியவற்றில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மழை நீர் தேங்காமல் இருக்க 6 வடிகால்கள் கட்டப்பட்டுள்ளது. காந்தி சிலை அருகில் பொதுமக்கள் நலனுக்காக ஹைமாஸ் விளக்கு, கண்ணகி தெருவில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

தொற்று நோயில் இருந்து மக்களை பாதுகாக்க அனைத்து தெருக்களிலும் வாருகால்கள் தினமும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி ஒத்துழைப்புடன் 31-வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் வாருகால்கள் உயர்த்தி கட்டப்பட உள்ளது.

உடனுக்கு உடன் தீர்வு

காந்தி காலனியில் வசிக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு கழிவறை கட்டப்பட உள்ளது. அதேபோல் கீழபள்ளிவாசல் தெருவிலும் வேளார் தெருவிலும் பன்னீர்செல்வம் தெருவிலும் பேவர் பிளாக் சாலை, வேளார் தெரு பாதை அகலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து தெருக்களிலும் குடிநீர் பற்றாக்குறையை போக்க போர்வெல் அமைத்து பிளாஸ்டிக் தொட்டி வைக்கப்பட உள்ளது. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் உதவியுடன் காந்தி காலனியில் சமுதாயக்கூடம் கட்டவும், சவுராஷ்ட்ரா பள்ளியின் பின்புறம் உள்ள ரேஷன் கடையை சின்ன கடையில் புதிதாக கட்டிடம் கட்டி மாற்றப்பட உள்ளது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு மக்கள் கூறும் பிரச்சினைகளை உடனுக்குடன் மாவட்ட கழக செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., பரமக்குடி எம்.எல்.ஏ.முருகேசன் மற்றும் நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்பட்டு வருகிறது.

துப்புரவு ஆய்வாளர் மதன், மேஸ்திரிகள் காந்திமதி, களப்பணியாளர்கள் நகர் மன்ற உறுப்பினருடன் இணைந்து செயல்பட கேட்டுள்ளார்கள். அனைத்து தெருக்களிலும் மின் விளக்குகள் எரிய விடப்பட்டுள்ளது. மின்விளக்கு எரியாத பகுதிகளில் உடனுக்குடன் அவற்றை சரி செய்ய மின் கம்பியாளர்கள் கஜினி முகமது, காளிதாசன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். குடிநீர் பிரச்சினை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய் பொருத்துனர் ராஜு தடை யின்றி குடிநீர் கிடைக்க உதவியாக உள்ளார். 31-வது வார்டு மக்களுக்கு அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்