இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
திருமயம் அருகே இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
முத்துமாரியம்மன் கோவில்
திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி திருவிழாவையொட்டி பூச்சொரிதல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்பட பல்வேறு வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சாமி தரிசனம்
பூச்சொரிதல் விழாவையொட்டி இளஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், அரசு அலுவலகங்களில் இருந்தும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் இளைஞர்களின் ஆட்டத்துடன் அம்மனுக்கு பல வண்ண பூக்களை கொண்டு வந்து பக்தர்கள் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். அம்மனுக்கு செலுத்தப்பட்ட பூக்களை நேற்று விடியற்காலை பிரித்தனர்.
விழாவையொட்டி பல்வேறு கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவையொட்டி ஊராட்சி சார்பாக சுகாதார வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டிருந்தது.
பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் ரகுமான் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.