ஈரோடு கிழக்கு தொகுதியில் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் அமோக வெற்றி

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.

Update: 2023-03-02 23:29 GMT

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4-ந் தேதி திடீர் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி்க்கு கடந்த மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

காங்கிரஸ்

2021-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது போலவே இடைத்தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று கூட்டணியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அ.தி.மு.க. வேட்பாளர்

அவரை எதிர்த்து அ.தி. மு.க. கூட்டணி சார்பில் கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டார். இந்த 2 முக்கிய வேட்பாளர்கள் தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியில் இருந்தனர்.

வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 238 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. 77 வேட்பாளர்கள் போட்டியில் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தப்பட்டு தேர்தல் நடந்தது.

74.79 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் சித்தோட்டில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. ஓட்டு எந்திரங்கள் அனைத்தும் காப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஓட்டு எண்ணிக்கை

இதையடுத்து நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. காலை 8 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஈரோடு மாவட்ட கலெக்டருமான எச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, தேர்தல் நடத்தும் அதிகாரி கே.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் காப்பு அறையின் சீல் திறக்கப்பட்டது.

முதலில் தபால் வாக்குப்பெட்டி எண்ணிக்கைக்காக கொண்டு வரப்பட்டது. பின்னர் பட்டியலின் படி வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுக்கப்பட்டு வாக்கு எண்ணும் அறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. முன்னதாக வேட்பாளர்கள், வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்பட்ட இடம் வரை வந்து வாக்கு எண்ணிக்கைக்கு தயார் நிலையில் இருந்தனர். இதுபோல் வாக்கு எண்ணும் அதிகாரிகளும் பணியை தொடங்கினார்கள்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் 2 அறைகளில் வாக்குகள் எண்ணப்பட்டன. ஒரு அறையில் 10 மேஜை, இன்னொரு அறையில் 6 மேஜை என 16 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

முன்னணி

முதல் சுற்று முடிவுகள் காலை 10 மணிக்கு மேல் வெளிவர தொடங்கின. அதிகாரபூர்வமாக 10.30 மணிக்கு முதல் சுற்று வாக்குகள் அறிவிக்கப்பட்டன. அதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 8 ஆயிரத்து 429 ஓட்டுகள் பெற்று இருந்தார். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 2 ஆயிரத்து 873 ஓட்டுகள் பெற்று இருந்தார். தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆனந்த் 112 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 526 வாக்குகளும் பெற்று இருந்தனர். முதல் சுற்றிலேயே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னணியில் இருந்தார். அ.தி.மு.க. வேட்பாளரை விட அவர் 5 ஆயிரத்து 556 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்.

2-வது சுற்று 11.30 மணிக்கு முடிந்தது. அதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மொத்தம் 16 ஆயிரத்து 286 வாக்குகள் பெற்றார். அவரை அடுத்து கே.எஸ்.தென்னரசு 5 ஆயிரத்து 487 வாக்குகள் பெற்று இருந்தார். 2 சுற்றுகளிலேயே 10 ஆயிரத்துக்கும் மேல் வாக்கு வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. 15-வது சுற்று முடிவுகள் நேற்று இரவு 7.50 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

இமாலய வெற்றி

15-வது சுற்று முடிவில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இமாலய வெற்றி பெற்றார். 2-வது இடத்தை பிடித்த கே.எஸ்.தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகள் பெற்று இருந்தார். இதன் மூலம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66 ஆயிரத்து 233 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடினார்.

3-வது இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 வாக்குகளுடன் பிடித்தார். தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் 1,432 ஓட்டுகள் பெற்று இருந்தார். நோட்டாவுக்கு 798 பேர் ஓட்டு போட்டு இருந்தனர்.

இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி க.சிவக்குமார் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்