கர்நாடகத்தில் ஆட்சி மாறினால், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் - மதுரையில் தொல்.திருமாவளவன் பேட்டி

கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் வந்தால், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என மதுரையில் தொல்.திருமாவளவன் கூறினார்.

Update: 2023-05-07 20:31 GMT


கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் வந்தால், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என மதுரையில் தொல்.திருமாவளவன் கூறினார்.

மதுரை வருகை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நடக்கும் ஆட்சியை அடித்தளமாக வைத்து, அதன் மூலம் தென்மாநிலங்களில் பா.ஜனதா ஊடுருவ முயற்சி செய்து வருகிறது. சனாதன சக்திகளை வளர்க்க 10 ஆண்டுகளாக முயற்சித்து பார்க்கிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழர்கள் அதிகம் உள்ள 12 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டேன். பிரசாரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வேண்டுகோளை முன்வைத்தேன். அதற்கு அங்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

திராவிட மாடல் குறித்து தமிழக கவர்னர் கூறிய கருத்து கண்டனத்திற்குரியது. அவர் கவர்னர் பதவியை விட்டு விலகி முழு நேர அரசியல்வாதியாகவும், ஆர்.எஸ்.எஸ். தொண்டராகவும் செயல்பட்டு வருகிறார். கவர்னராக இருந்துகொண்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வருகிறார். சமூக நீதி கோட்பாட்டுக்கு எதிராக செயல்படுகிறார். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. அவர் பதவி விலகிவிட்டு, ஆர்.எஸ்.எஸ். தொண்டராக பணிபுரியலாம்.

சேலத்தில் தமிழக கவர்னர் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்ததும் கண்டிக்கக்கூடியது. கருத்து ரீதியாக விமர்சனம் செய்யலாம். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது.

புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதனை, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் உள்ளவர்களுக்கு புதுச்சேரியில் என்ன வேலை? என கேட்கிறார். குஜராத்தில் உள்ள மோடிக்கு கர்நாடகத்தில் என்ன வேலை? கவர்னர் தமிழிசை இவ்வாறு பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம்

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தற்போது திரையிடப்பட்டு வருகிறது. அது திட்டமிட்ட வெறுப்பு அரசியலை மையமாகக் கொண்ட படம்.

இந்த படத்திற்கு, சினிமா ரசிகரை போல ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் பிரதமர் மோடி கருத்து சொல்லி வக்காலத்து வாங்கி பேசிக் கொண்டிருக்கிறார். இதை இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு என்று பார்க்கக்கூடாது. சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானது என்று உணர்ந்து தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்