மாணவர்கள் புத்தகம் வாசித்தால் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டிய தேவை இருக்காது - அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான நூலக செயலியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிமுகம் செய்து வைத்தார்.;

Update:2022-08-17 18:01 IST

திருச்சி,

திருச்சி அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு இயக்கம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான நூலக செயலி ஆகியவற்றின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புத்தக வாசிப்பு இயக்கத்தை தொடங்கி வைத்து பள்ளி மாணவர்களுக்கான நூலக செயலியை அறிமுகம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது,

ஒவ்வொரு மாணவரும் நூலகத்திற்கு சென்று 20 நிமிடமாவது புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசித்தால் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டிய தேவை இருக்காது. மாணவர்களை படிப்பில் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக புத்தகம் படிக்கலாம் வெளிநாடு பறக்கலாம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்தள்ளது.

அடுத்த கட்டமாக மாணவர்களுக்கு வாரம் ஒரு புத்தகம் வழங்கப்படும். அந்த புத்தகத்தை படித்து விட்டு வந்து அந்த புத்தகத்தின் கருத்துக்களை ஓவியமாக வரையலாம். விமர்சனம் செய்யலாம். கட்டுரையாக எழுதலாம். இதன் மூலம் மாணவர்கள் புதிய உலகத்தை படைக்க வேண்டும்.

வாசிக்கும் பழக்கம் உள்ள மாணவர்களை தேர்வு செய்து அவர்களை நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்களுடன் கலந்துரையாடவும், பிற நாடுகளில் உள்ள புகழ்பெற்ற நூலகங்களுக்கு அழைத்து செல்லவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. எனவே மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி அரசு கொண்டு வரும் திட்டங்களை நல்ல விதத்தில் பயன்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது புத்தகங்கள் மட்டுமே.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்